பக்கம் எண் :

141

நச்சினார்க்கினியர் தொல்காப்பிய 34ஆம் நூற்பா உரையில், ‘மியா இடம்; மகரம் பற்றுக்கோடு; யாவும் ‘இகரம் அரை மாத்திரை ஆதற்குச் சார்பு’ எனவும், அடுத்த நூற்பாவில், ‘யகரம் இடம்; உகரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு எனவும் கூறியுள்ளார்.

அறு வகைப்படும் குற்றியலுகரமும் யகர முதல் மொழி வரின் கெடக் குற்றியலிகரம் தோன்றுவதற்கு எடுத்துக் காட்டுக்கள் தந்துள்ளார். புணர்மொழியும். இகரம் சார்வதற்கு அமைந்த வல்லெழுத்தும் புணர்மொழிக் குற்றியலிகரத்திற்கு முறையே இடனும் பற்றுக் கோடும் ஆகும். வினைப்பகுதியொடு மியா சேர்தலான் ஆகிய ஒரு மொழியும். மகரமும் தனிமொழிக் குற்றிலிகரத்திற்கு முறையே இடனும் பற்றுக்கோடும் ஆகும். குற்றியலிகரம் நிலைமொழி ஈற்றெழுத்தின் தானத்தில் வருதல் வேண்டியமையின் அதற்குவருமொழி யகரம் சார்பு ஆயிற்று.

நன்னூலார் குற்றியலுகரம் முப்பத்தாறு எனக் கொண்டு. அவை திரிந்த குற்றியலிகரம் முப்பத்தாறனொடு மியா என்பதன் முதற்கண்ணதாகிய குற்றியலிகரமும் சேரக் குற்றியலிகரம் முப்பத்தேழ் என்பது, ஓர் எழுத்தினையே இடம் நோக்கிப் பகுத்து எண்ணுதல் இவ்வாசிரியருக்கு உடன்பாடு அன்று ஆதலின், அவர் கருத்துக்கு முரண்பட்டதாகும்.

ஒத்த நூற்பாக்கள் :

‘குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யாஎன் சினைமிசை உரைஅசைக் கிளவிக்கு
ஆவயின் வருஉம் மகரம் ஊர்ந்தே.’           தொல்.34
‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.’           தொல்.35