144 செவ்வெண்ணாக எண்ணாது நெடிலோடு எனப் பிரித்தார், அதன் ஈற்றுக்கண் நின்ற உகரம் ஈரெழுத்து ஒரு மொழிக் குற்றுகரம் என்பது அறிவித்தற்கு. எனவே நீடாது குறுகாது வடாது தெனாது முதலிய மொழி இறுதி உகரம் உயிர்த்தொடர்மொழிக் குற்றுகரம் ஆவது அல்லது நெடில் இறுதிக்கண் நின்ற குற்றுகரம் ஆகாது எனவும், நெட்டெழுத்து இறுதி தொடர்மொழி இறுதி எனவே, அது இது முதலிய ஈரெழுத்து ஒருமொழி ஈற்று உகரம் நெட்டெழுத்து இறுதியும் தொடர்மொழி இறுதியும் அன்மையின் முற்றுகரம் ஆவது அல்லது ஈரெழுத்து ஒருமொழிக் குற்றுகரமும் உயிர்த் தொடர்மொழிக் குற்றுகரமும் ஆகாது எனவும் கொள்க. ஓரெழுத்து ஒரு மொழி, தொடர்மொழி என மொழி நிலை இரண்டு என்றார்க்கு, அவையும் தொடர்மொழி இறுதிக் குற்றுகரம் ஆவான் செல்லுமாறு அறிக. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக்கோலே ஆமாறு போல, உயிரின் குறுக்கமும் உயிரேயாமேனும், புணர்ச்சி வேற்றுமையானும் பொருள் வேற்றுமையானும், சீரும் தனையும் சிதையும் இடத்து அலகு பெறாமையானும் குற்றிகரக் குற்றுகரங்கள் சார்பு எழுத்து என உயிரின் வேறாயின. விளக்கம்: இவ்வாசிரியர் தொல்காப்பியனாரை ஒருபுடை பின்பற்றிச் சார்பெழுத்துக் கூறுங்கால், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பனவற்றையே முதற்கண் சுட்டி ஏனைய உயிர் மெய் போல்வனவற்றைப் பின்னரே நிறுத்தியுள்ளார் ஆதலின் அம்முறை வைப்புப் பற்றிச் சார்பெழுத்துக்களை விதந்து கூறுகிறார். நிலைமொழி ஈற்று வல்லினம் ஆகிய பற்றுக்கோடும் அச்சொல்லின் ஈற்று அயல் எழுத்தாகிய நெடில் முதலிய |