பக்கம் எண் :

249

ஆ-கா ஓரெழுத்து ஒருமொழி; மணி-கூனி ஈரெழுத்து ஒருமொழி; அறம்-அகலம்-அருப்பம்-தருப்பணம்-உத்திராட்டதி எனவும், கூனன்-குழையன் பொருப்பன்-அம்பலவன்-அம்பலத்தான்-அம்பலத்தினான்-உத்திரட்டாதியான் எனவும் வருவன தொடர் மொழி. பிறவும் அன்ன. தொடருங்கால். பகாப்பதம் மூன்று எழுத்து முதல் ஏழுஎழுத்து ஈறாகவும், பகுபதம் மூன்று எழுத்து முதல் ஒன்பது எழுத்து ஈறாகவும் தொடரும் எனக் கொள்க. எழுந்திருத்தல் எழுந்திருக்கின்றான் எனவும், பொருத்துவித்தல் பொருத்துவிக்கின்றனன் எனவும் சிறுபான்மை மிக்கும் தொடர்வனவும் கொள்க.

‘சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’ இத்தொடக்கத்து ஒட்டுப்பெயர்கட்கு வரையறை இல்லை என்க.

ஒற்றும் குற்றுகரமும் எழுத்து எண்ணப்படா எனச் செய்யுளியலில் கூறினமைபற்றிக் கால் மால் கல் வில் நாகு தெற்கு எஃகு கொக்கு கோங்கு என்பனவற்றை ஓர்எழுத்து ஒருமொழி என்றும், சாத்தன் கொற்றன் வரகு குரங்கு என்பனவற்றை ஈர்எழுத்து ஒருமொழி என்றும் கூறின். ஆகாது; என்னை? செய்யுட்கண் இசை பற்றி அவை எண்ணப்படா எனவும். மொழி ஆக்கத்தின் கண் பொருள் பற்றி எண்ணப்படும் எனவும் கருதி,

‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’           தொல். 43

‘குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே’           தொல். 44

எனவும்,

‘ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்தொடர் மென்தொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகுஇடன்,           தொல். 45

எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதலின். 1