296 இது நிகழ்காலம் காட்டும் வினைமுற்றுப் பகுபத இடைநிலைகள் கூறுகின்றது. இ-ள்: ஆநின்றும் கின்றும் கிறுவும் ஆகிய மூன்றும் மூவிடத்தும் வரும் ஐம்பாற்கண்ணும் நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபத இடைநிலைகளாம் என்றவாறு. புதியன புணர்த்தலும் என்றதனால், கிறுவும் உடன் ஓதினார். வரலாறு; உண்ணாநின்றான் உண்கின்றான் உண்கிறான் எனவரும் ஏனைப்பால் இடங்கள்தொறும் ஒட்டுக. உரையிற்கோடலான், உண்ணாநின்றிலன் உண்ணாநின்றனன் அல்லன், உண்ணாநின்றிலான் உண்ணாநின்றான்அல்லன், உண்கின்றிலன், உண்கின்றனன்அல்லன், உண்கின்றிலான் உண்கின்றான் அல்லன் என மறைக்கண் ஆநின்று கின்று என்னும் இடைநிலைகள் வேறு சில எழுத்துக்களோடு கூடி நிகழ்காலம் காட்டும் எனவும், உண்ணாகிடந்தான் உண்ணா இருந்தான் எனக் கிடவும் இருவும், உரைக்கிற்றி ‘நன்றுமன் என்இது நாடாய் கூறி’ என றகரமும், ‘கானம் கடத்திர் எனக்கேட்பின்’ கலி.7-3 எனத் தகரமும், உண்பல் வருவல் உண்ணாநிற்பல் எனவும் ‘கூடநீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு’ சிந். 1751 உண்பேற்கு எனவும் முறையே வினை வினைப்பெயர்க்கண் வகர பகரங்களும் சிறுபான்மை நிகழ்காலம் காட்டும் எனவும் கொள்க. பிறவும் அன்ன. 11 |