பக்கம் எண் :

421

அவைதாம்
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமொடு அவை என மொழி’           தொல். 170

என்ப ஆதலின், சிறுபான்மை இம்மி, இடாஎன்றால் போல்வனவும் கொள்க. எண்ணுப் பெயர்க்கு வரையறை இன்று. 26

விளக்கம் : இந்நூற்பா உரையில் அளவும் நிறையும் பற்றித் தொல்காப்பிய நூற்பாக்களிலும் உரையிலும் கூறப்பட்ட செய்திகள் பலவும் இடம் பெற்றுள்ளன.

‘உயிரும் புள்ளியும் இறுதியாகி’ தொல். 164 என்ற இந்நூற்பாஉரை நச்சினார்க்கினியர் வரைந்தஉரையை ஒட்டியதே.

‘முத்தை வரூஉம் காலம் தோன்றின்
ஒத்தது என்ப ஏஎன் சாரியை’

என எதுகைத் தொடை நோக்கி முந்தை முத்தை என்று ஆயிற்று. நாழியே ஆழாக்கு முதலியன அளவுப் பெயர் ஏகாரம் பெற்றுத் தம் முன்னர்த் தம்மில் குறைந்தன வந்தமைக்கு எடுத்துக் காட்டு.

தொடியே கஃசு முதலியன நிறைப் பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மில் குறைந்தன வத்தமைக்கு எடுத்துக்காட்டு.

ஈறுகள் உயிரும் புள்ளியும் ஆகிய இரண்டனுள் அடங்குதலின், பொதுவாகக் கூறல் அமையும்; உயிரும் புள்ளியும் இறுதியாகி’ என்று கூறியது மிகை. அம்மிகையால் சில செய்திகள் கொள்கிறார்; இப் பெயர்கள் ஏகாரம் இன்றியும் குறுணிநானாழி ஐநாழிஉழக்கு என்று வருதலை நச்சினார்க்கினியரும் இம் மிகையால் கொள்கிறார்.