426 வருமொழி முற்கூறிய அதனால் இருநாடுரி முந்நாடுரி என ஒட்டுக என்றார் நச்சினார்க்கினியர். (தொல். 240) ஒத்த நூற்பாக்கள்: ‘உரி வரு காலை நாழிக் கிளவி இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே டகரம் ஒற்றும் ஆவயி னான.’ தொல். 240 முழுதும் நன். 174 ‘உரிவரின் நாழியின் ஈற்றுயிர் மெய்கெட மருவும் டகரமாம் வல்லினப் புள்ளி.’ மு. வீ. பு. 102 ‘ஆவிமுன் ஆவியோடும்-கூறா ழகாரம் அழிந்து டகாரம் குறுகிடுமே,’ வீ. 22 ‘உரிவரின் நாழியின் ஈற்றுயிர் மெய் ஐந்தாம்.’ நே. 19 எகரவினா முச்சுட்டின் முன்னர் நாற்கணம் 80. எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு நீடலும் யகரம் நிலவலும் நெறியே. இது வினாவும் சுட்டும் ஆகிய உயிர் ஈற்று இடைச் சொற்கள் நாற்கணத்தொடும் புணருமாறு தொகுத்து உணர்த்துகின்றது. இ-ள் : எகர வினாமுன்னும் அகரம் முதலிய மூவகைச் சுட்டுக்கள் முன்னும் உயிர்முதல் மொழியும் யகர முதல்மொழியும் வந்தால் வகரமும், ஏனைய வந்துழி வந்தவையும், செய்யுட்கண் சுட்டு நீண்டு இசைத்தலும், அங்ஙனம் நீண்டு இசைத்த வழி யகரம் மிகுதலும் முறைமை என்றவாறு. |