52 சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரிமையுடையவர் தன் ஆசிரியன், தன் ஒரு சாலை மாணாக்க நண்பன், தன் மாணாக்கன், அறிவு ஆற்றலில் மிக்க உரையாளன் என்ற நால்வரும் என்பது. எனவே, இவருள் ஒருவராலேயே சிறப்புப்பாயிரம் இயற்றப்படும் என்பது. இதனையே மாறன் அலங்கார ஆசிரியரும், ‘பன்னருஞ் சிறப்புப் பாயிரம் பகர்வோர் தன்உயிர் பேணும் சதிர்ஆ சிரியன் ஒருபுடை கற்ற உயர்மா ணாக்கன் தன்னொடு கற்ற தலைமா ணாக்கன் உரைகா ரணன்எனும் உரனுடை யோரே. மாறன் -63 என்ற நூற்பாவால் குறிப்பிட்டுள்ளார். இனிச் சண்முகனார் இப்பாயிரம் செய்தற்கு உரியார் முதல் மூவருமே, தகும் உரைகாரர் அல்லர் என்ற கருத்துடையவர் ஆவர். அவர் சிறப்புப்பாயிரம் என்பது ஒரு நூலது பெருமையே கூற வந்ததாம் ஆகலின், அந்நூலது பெருமை விளங்குமாறு அதனை ஆக்கியோன் பெருமையும் அதனைக் கேட்போர் பெருமையும் அவர் காலத்து உடன் இருந்து பழகினார்க்கு அன்றி ஏனையோர்க்கு உள்ளவாறு அறிதல் அரிது ஆகலானும், தந்தைமுதலாயினார் அறியினும் அவர் புலமையோராய் இருத்தல் ஒருதலையன்று ஆகலானும், உள்ளவாறு அறிந்து உரைக்கும் இயல்புடைமை அம்மூவர்க்கும் ஒருதலை ஆகலானும், பொதுப்பாயிரம் ஒருவரைச்சுட்டாமல் ஆசிரியரையும் மாணாக்கரையும் பொது இயல்பானே கூறும் இயல்பினது ஆகலின், உடன் இருத்தல் வேண்டாமையானும் அக் கருத்துடையார் என்பது. |