53 இனி உரையாளன் பாயிரம் உரைத்தற்கு உரியன் அல்லனோ எனின், அவன் நூல் செய்தான் காலத்தோன் ஆயின் உரியனாம்; பிற்காலத்தோன் ஆயின் ஆக்கியோன் பெருமை முதலியன முற்றும் உணரான் ஆகலின், அவன் உரிமை சிறப்புடைத்து அன்று என்பது,என்று கூறியதும் நோக்கத்தக்கது. ‘மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே’. நன்-52 எனவும் வருவனவற்றான் முறையே காண்க. சிறப்புப்பாயிரத்து இலக்கணம் முற்றிற்று. இந்நூற்பா நன்னூலில் உள்ளது. இது புலவன் தன்னைப் புகழ்தற்கு ஆம் இடங்களைச் சுட்டுகிறது. அரசனுடைய அவைக்குப் புலவன் தான் அனுப்பும் சீட்டுக்கவி இயற்றுங்காலும், தன்னுடைய ஆற்றலை உள்ளவாறு உணரார் இடைத்தான் இருந்து உரையாடுங்காலும், புலவர் பலர் பொருந்திய அவையிடை வாதிட்டுத் தன்கோள் நிறுத்தப் பிறன்கோள் மறுத்துத் தன்கருத்தை வலியுறுத்தி வெல்லுங்காலும், தன்னை வேற்றான் ஒருவன் பழிக்குங்காலும், புலவன் ஒருவன் தன்னைத்தானே புகழ்தலும் ஏற்றது; உம்மையான் ஆண்டும் தான்தன்னைப் புகழாமல் தமன்தன்னைப் புகழுமாறு இருத்தலே மேதக்கது என்றவாறு. இனிப் பிரயோக விவேகம் வரைந்த சுப்பிரமணிய தீக்கிதர் தம் நூலுக்குத் தாமே சிறப்புப்பாயிரம் வரைந்து தம் கூற்று ஏற்றதே என்பதனையும் விளக்கியுள்ளார். அதனை நோக்குவோம். |