538 இஃது உருபு உயிர்ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. இ-ள்: ஒடு ஓடு என்னும் மூன்றன் உருபொடு தொடர்ந்த சொல்லின் முன்னும், அது ஆது என்னும் ஆறன் உருபொடு தொடர்ந்த சொல்லின் முன்னும் அதிகார வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: சாத்தனொடு கொண்டான் சாத்தனோடு கொண்டான்-சென்றான்-தந்தான்-போயினான் எனவும், சரத்தனதுகை, சாத்தனாதுகை-செவி-தலை-புறம்-எனவும் வரும். மூன்றாவது உயிரீற்றுப் புணரியல் முற்றிற்று. விளக்கம் ‘இயல்பினும் விதியினும்’ (82) என்ற நூற்பா வுரையுள் அவ்விதியை உருபிற்கும் உரியதாகக் கூறினார் ஆதலின் பொதுவிதியான் எய்திய வல்லெழுத்தை மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு ஓடு என்பனவும், ஆறாம் வேற்றுமை ஒருமை உருபுகளாகிய அது ஆது என்பனவும், பன்மை உருபாகிய அ என்பதும் (86) பெறா என்று விலக்கல் வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஒத்த நூற்பா: ‘மூன்று ஆறு உருபு ஆகும் உகரம் முன்னர் இயல்பாம்,’ நன். 179 மூன்றாவது-உயிர்ஈற்றுப் புணரியல் முற்றிற்று. |