551 வல்லெழுத்து மிக்கு முடிதலும், மெல்லெழுத்து மிக்குமுடிதலும், மெல்லெழுத்து முதல்மொழிவரின் நிலைமொழி இறுதி னகர ஒற்றோடு கெடுதலும் கெடாமையும் ஆகி உறழ்ந்து முடிதலும், இடையெழுத்து முதல்மொழி வரின் இயல்பு ஆதலும் பொருந்தும்; உயிர்முதல்மொழி வரின் பிறிதும் ஒரு தகரஒற்று உடன் மிகுந்த தகரத்தொடு நின்று முடிதலும் உரித்து, உம்மையான் பிற சாரியைபெற்று முடிதலும் இயல்பாய் முடிதலும் உரித்து என்றவாறு, எ-டு: தேன்குடம் தேற்குடம்-சாடி-தூதை-பானை எனவும், தேக்குடம் தேங்குடம்-சாடி-தூதை-பானை எனவும், தேன்ஞெரி தேஞெரி-நுனி-முரி எனவும், தேன் யாப்பு - வலிமை எனவும், தேத்திறால் தேனினிறால்-அடை-ஈ-எனவும் முறையே காண்க. ‘பிற’ என்றதனானே ஒற்றுமிகு தகரமொடு நிற்புழி ஈறு கெடுதலும். தேஞெரி தேஞ்ஞெரி-நுனி-முரி என னகரம் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் உறழ்தலும், அலவன கலுழன் வலியன் கண்-செவி-தலை-புறம் எனவும் கான்கோழி வான்கரை எனவும் திரியாமையும். வரிற்கொள்ளும்-செல்லும்-தரும்-போம் என வினையெச்சத்து இறுதி திரிதலும், ‘அதுமற் கொண்கன் றேரே’ ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்’ (அகநா. 7-5) என மன் சின் என்னும் அசைநிலை இடைச்சொற்கள் இறுதி திரிதலும், எகினங்கோடு-செதிள்-பூ என எகின மரப்பெயர் அம்முப்பெறுதலும், இன்னோரன்ன பிறவும் கொள்க. |