553 கெட்டதனை இவ்வாசிரியர் ‘பிற’ என்ற மிகையாற் கொண்டார். தொல்காப்பியனார் ‘வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை’ (340) என்பதனால் குறிப்பிட்டுள்ளார். அந்நூற்பாவில் ‘ஆமுறை’ என்ற மிகையைக் கொண்டு நச்சினார்க்கினியர் தேன் என்ற சொல்லின் இறுதி னகரம் கெட்டு வருமொழி மென்கணத்தோடு உறழ்ந்து தேநெரி முதலாக முடிவனவற்றை, ‘மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும்’ தொல். 342 என்ற நூற்பாவில் கட்டியுள்ளார். கான்கோழி வான்கரை முதலியன திரியாமல் இயல்பு ஆதலை நச்சினார்க்கினியர் ‘குயின் என் கிளவி இயற்கை ஆகும்’ (தொல். 335) என்ற நூற்பாவின் மிகையால் கொண்டார். அலவன் கலுழன் முதலியன வன்கணம் வரின் இயல்பாகப் புணர்தலையும் வினையெச்சம் திரிதலையும் ‘தன் என்’ (நன். 217) என்பதன்கண் ‘உறவே’ என்ற மிகையால் கொண்டார் மயிலைநாதர். வினையெச்சங்கள் இடைச்சொற்கள்-ஆகிய னகர ஈற்றுச்சொற்கள் ஈறு திரிந்து புணரும் என்பதனைத் தொல்காப்பியனார். ‘மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினைஎஞ்சு கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர்.’ - தொல். 333 என்ற நூற்பாவால் குறிப்பிட்டுள்ளார். எகினங்கோடு முதலியன. ‘எகின்மரம் ஆயின் ஆண்மர இயற்றே’ (தொல். 336) என்ற நூற்பாவால் கொள்ளப்படும். |