பக்கம் எண் :

554

வெள்ளாண்குமரி முதலிய முடிபுகளை நச்சினார்க்கினயர் ‘கிளைப்பெயர் எல்லாம் கிளைபெயர் இயல’ (தொல். 338) என்னும் நூற்பாவின் “எல்லாம்” என்ற மிகையால் கொள்கிறார்.

முன்னிரண்டு நூற்பாக்களும் வேற்றுமை முடிபின ஆதலின் ‘தேன்’ என்ற நிலைமொழி பற்றிய இந்நூற்பாவும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கே என்பது இவ்வாசிரியர் கருத்து.

நன்னூலார் இம்முடிபுகளை இருவழிக்கண்ணும் கொண்டு நூற்பா யாத்துள்ளார். அஃது இவ்வாசிரியருக்கு உடன்பாடு அன்று. தொல்காப்பியத்துள் தேன் என்ற நிலைமொழி பற்றிய நூற்பாக்களில் (340-344) நச்சினார்க்கினியரும் உரையாசிரியரும் வேற்றுமை முடிபேகொண்டு விளக்குவதும் உளங்கொள்ளத்தக்கது.

எகின் என்பது மரத்தையும் ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாம், பறவை பற்றிய சொற்குத் தனியே விதி (125) கூறுதலின், எகின் மரப்பெயர்ப்புணர்ச்சியை இந்நூற்பாவில் மிகையால் கொண்டார்.

ஒத்த நூற்பாக்கள்:

‘தேன்என் கிளவி வல்லெழுத்து இயையின்
மேல்நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை’           தொல். 340

‘மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை’ ,,      341

‘மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும்.’           தொல். 342

‘இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும்.’      343

‘ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே.’      344