570 ‘மகரம்தான் வன்மைவரின் வர்க்கத்து ஒற்றாகும் புகரிலா மென்மைவரின் பொன்றும்.’ நே. 18 முழுதும் நன். 219 ‘வலிவரின் மஃகான் வருக்கம் ஆகும் நவ்வரின் தனிக்குறில் மவ்வும் நவ்வாம் அல்வழி அன்றி மகரம் கெடுமே.’ தொ.வி. 23 ‘மகர இறுபெயர் மிகலும் ஈறு அழிதலும் ஆகும் வேற்றுமைக் கண்என மொழிப.’ மு. வீ. பு. 151 ‘வேற்றுமை அல்வழி மெல்லெழுத்து ஆகும்.’ 155 ‘இலம்முன் படுவரின் இயல்பா கும்மே.’ 157 சில மகரஈற்று முடிபு 130. வேற்றுமை ம-போய் வலிமெலி உறழ்வும் அல்வழி உயிர்இடை வரின்இயல் பும்உள. இது வேற்றுமைக்கண் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தலும் அல்வழிக்கண் எய்தியது விலக்கலும் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண் வல்லெழுத்துவரின் ஈறுகெட்டு வல்லெழுத்துமிக்கும் மெல்லெழுத்து மிக்கும் உறழ்த்தும், அல்வழிக்கண் உயிர்க்கணமும் இடைக்கணமும் வரின் ஈறுகெடாது இயல்பாயும் முடியும் மகரஈற்று மொழிகளுள் சில உளவாம் என்றவாறு. வரலாறு: குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் ஈறுகெட்டு உறழ்ந்தது. இதுபோல ஒத்த உறழ்ச்சியது அன்றிக் குளச்சேறு குளஞ்சேறு-தாது எனவரும் உறழ்ச்சியும், சண்பகக்கோடு சண்பகங்கோடு எனச் செய்யுட்கண் வரும் உறழ்ச்சியும் கொள்க. மரமடைந்தது-ஆடிற்று-யாது-வலிது-என இஃது உயிர்க்கணமும் இடைக்கணமும்வர அல்வழிக்கண் ஈறு கெடாது இயல்பாக முடிந்தது. |