611 இது வகரஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.:) சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுப் பெயர் மூவினமும் வந்து புணர, முறையானே ஈற்று வகரம் ஆய்தமும் வந்த மெல்லெழுதும் இயல்பும் ஆம், அல்வழிக்கண் என்றவாறு. வரலாறு: அஃகடிய இஃகடிய உஃகடிய-சிறிய-தீய பெரிய எனவும், அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண்-நூல்-மணி எனவும், அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ்-வட்டு எனவும் முறையே காண்க, இவ்வழக்கு இக்காலத்து அரிய. 26 விளக்கம் ‘வகரக்கிளவி நான்மொழி ஈற்றது’ (தொல். 81) என்பதனால், வகர ஒற்றீற்றுச் சொற்கள் அவ்-இவ்-உவ்-தெவ் என நான்கே ஆதலும், அவற்றுள் சுட்டெழுத்தினை முதலாக உடைய வகர ஈற்றுப்பெயர் மூன்றாதலும் அறிக. ‘அஃகடிய இஃகடிய உஃகடிய-சிறிய-தீய-பெரிய என வரும் இவ்வழக்கு இக்காலத்து அரிய’ என்றார் நச்சினார்க்கினியர் (தொல். 379). இவ்வாசிரியர் வகரஈற்று அல்வழிப் புணர்ச்சி முடிபே இக்காலத்து அரிய என்கிறார். உரையில்’ அஃகடிய முதலிய இவ்வழக்கு’ என்ற தொடரில் ‘அஃகடிய முதலிய’ என்ற சொற்கள் ஏடு எழுதுவோரால் விடப்பட்டன போலும். வருமொழி உயிரொடு புணரும் புணர்ச்சி ‘தனிக்குறில் முன் ஒற்று’ (66) என்பதனால் கொள்ளப்படும். |