629 விளவினை விளவினது என்புழிச் சாரியையும் உருபும் நிறுத்த சொல்லாயே நிற்கும் எனக்கோடலின், விளவினைக்குறைத்தான், மலையொடு பொருத மால் யானை, மத்திகையாற்புடைத்தான், சாத்தற்குக்கொடுத்தான் காக்கையிற்கரிது களம்பழம், காக்கையது பலி-இத்தொடக்கத்தன எல்லாம் மேலைப்புணரியல் ஓத்துக்களுள்ளே நிலைமொழியாக நிறுத்தி வருமொழியொடு புணர்க்கப்பட்டு இவ்வாறு முடியும் அன்றே? அங்ஙனம் முடிவனவற்றை நிலைமொழியாக நிறுத்தி ஈண்டு வருமொழியொடு புணர்த்தல் கூறியது கூறலாம் என மறுக்க. விளக்கம் வேற்றுமை உருபுகளைக் கிடக்கை முறையிற் கூறாது உயிர்முதல் மெய்முதல் எனப் பகுத்து ஐ-ஒடு-இன்-அது என்பனவற்றைப் முன்னர்ப் புணர்த்தும் கு-கண் என்பனவற்றைப் பின்னர்ப் புணர்த்தும் எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளார். எடுத்துக்காட்டுக்கள் உயிர்திணைப்பெயர் அஃறிணைப்பெயர் விரவுப்பெயர் என்ற முறையைப் பின்பற்றியுள்ளன. உயர்திணைப் பெயரொடு உருபுகள் புணரும்வழி ஏற்படும் விகாரம் ‘சில விகாரமாம் உயிர்திணை’ (இ.வி.71) என்பதனாலும், பொதுப்பெயராகிய விரவுப்பெயரொடு உருபுகள் புணரும்வழி ஏற்படும் விகாரம் பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்’ (71) என்பதனாலும் கொள்ளப்பட்டுள்ளன. முதலில் உயிர் ஈற்றுச்சொற்களும் அடுத்து ஒற்றீற்றுச் சொற்களும் உயிர்முதல் உருபும் ஒற்றுமுதல் உருபும் ஏற்குமாறு காட்டப்பட்டுள்ளது. ‘புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை’ (தொல்.244) என்பதனால் புளி பொருட்புணர்ச்சிக்கண் அம்முச்சாரியை பெற்றது. |