633 இஃது இகர ஈற்றுள் ஒரு சாரனவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்: பன்மைப்பொருளினைக் கருதின பெயர்களின் இறுதிநின்ற அகரம் அற்றுச்சாரியையோடு பொருந்துதலை ஒழிதல் இல்லை என்றவாறு. வரலாறு: கரிய-உள்ள-இல்ல-பல்ல-சில்ல-உள இல-பல-சில என நிறுத்தி, உருபு வருவித்து அற்றுக் கொடுத்துக் கரியவற்றை-கரியவற்றொடு-கரியவற்றுக்கு-கரியவற்றின்-கரியவற்றது-கரியவற்றுக்கண்-என்றாற் போலப் பிறவற்றொடும் ஒட்டுக. விளக்கம் எய்தியது விலக்கல்-சென்ற நூற்பாவன் எய்திய இன்சாரியையை விலக்கல். பிறிதுவிதி வகுத்தல்-அற்றுச்சாரியை பெறும் என்பது. ‘எச்சமின்று’ என்பதனால் பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாம்உருபு அற்றுப்பெற்றே முடியும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. (தொல்.174) தொல்காப்பியனார் காலத்து வற்றுச்சாரியை பிற்காலத்தில் அற்றுச்சாரியை ஆதல் ‘மரபு நிலைதிரியா மாட்சியது’ என்க. (சூ.வி. பக்.8) ஒத்த நூற்பாக்கள்: ‘பல்லவை நுதலிய அகர இறுபெயர் வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. தொல். 174 ‘அகர இறுபெயர் அற்றொடு சிவணும்,’ மு. வீ.பு. 50 |