பக்கம் எண் :

634

னகரச்சாரியைப்பேறு

151ஆமா கோ-ன அணையவும் பெறுமே.

இஃது ஆகார ஈற்றுள் சிலவற்றிற்கும் ஓகார ஈற்றுள் ஒன்றற்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: ஆவும் மாவும் கோவும் இன்னே அன்றி னகரச்சாரியை பெற்று முடியவும் பெறும் என்றவாறு.

ஆவுடனே ஓதியமையின் மா என்றது விலங்குமா என்றே கொள்க, ஒன்றென முடித்தலான் ஊ என்பதற்கும் னகரம் கொடுக்க.

வரலாறு: ஆனை ஆனொடு மானை மானொடு கோனை கோனொடு ஊனை ஊனொடு எனப் பிறவற்றோடும் ஒட்டுக.

உம்மையான்,ஆவினை-மாவினை-கோவினை-எனப்பொதுவிதி பெறுதலும், உரையிற் கோடலான் ஊனை ஊனினை என னகரமும் இன்னும் பெறுதலும் கொள்க.

‘ஒன்றாது நின்ற, கோவினை அடர்க்க வந்து’ (சிந். 366) எனச்செய்யுளகத்தும் காண்க.

‘ஆனநெய் தெளித்து நானம் நீவி’ என ஆன் அகரம் பெறுதல் புறநடையால் கொள்க.

விளக்கம்

எய்தியது - இன்சாரியை

சிறப்புவிதி-னகரச்சாரியை

மா என்னும் பல பொருள் ஒரு சொல் ஈண்டு இனம் பற்றி விலங்கினை உணர்த்தி நின்றது.