638 ஒத்த நூற்பாக்கள்: ‘எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் ஒற்றும் உகரமும் கெடும்என மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையும் இறுதியான தம்இடை வரூஉம் படர்க்கை மேன நும்இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.’ முழுதும் - நன்.246 . மு.வீ.பு. 66 தொடக்கம் குறுகும் பெயர்கள் 154 தான்நாம் தாம்முதல் குறுகும் யான்யாம் நீ நீர் என்எம் நின்நும் ஆம்பிற குவ்வின் அ-வரும் நான்குஆறு இரட்டல. இது னகர மகர ரகர ஈறுகட்கும் ஈகார ஈற்றிற்கும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்: தான்-தாம்-நாம் என்னும் மூன்று பெயரும் முறையே தன் என்றும், தம் என்றும், நம் என்றும் நெடு முதல் குறுகும்; யான்-யாம்-நீ-நீர் என்னும் நான்கு பெயரும் முறையே என் என்றும் எம் என்றும் நின் என்றும் நும் என்றும் திரியும்; அங்ஙனம் திரிந்தவழி நான்கன் உருபுபுணரும் இடத்து இடையே அகரச்சாரியை வரும். இம்மொழிகளொடு நான்கன் உருபும் ஆறன் உருபும் புணரும் இடத்துக் குற்றொற்று இரட்டா என்றவாறு. இவ்வெழுத்து இவ்வெழுத்தாய்த் திரியும் என்னாது யான்-யாம்-நீ-நீர் என்பன முறையே என்-எம்-நின் நும்-ஆம் என்றாரேனும் |