பக்கம் எண் :

639

‘ஆ எ - ஆகும் யாம்என் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்’      188

என்பன முதலாக ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றானும், நும் என்பதற்கு ஏற்றபெற்றியானும் அவற்றின் திரிபினை வேறுவேறு பகுத்துக்காண்க.

வரலாறு:

தன்னை-தன்னொடு-தனக்கு-தனது-எனவும்

தம்மை-தம்மொடு-தமக்கு-தமது-எனவும்

நம்மை-நம்மொடு-நமக்கு-நமது-எனவும்

என்னை-என்னொடு-எனக்கு-எனது-எனவும்

எம்மை-எம்மொடு-எமக்கு-எமது-எனவும்

நின்னை-நின்னொடு-நினக்கு-நினது-எனவும்

நும்மை-நும்மொடு-நுமக்கு-நுமது-எனவும் வரும்.

பிறவற்றோடும் இவ்வாறே ஒட்டுக. ‘பிற’ என்றதனானே நீ என்பது உன் என்றும், நீர் என்பது உம்என்றும் திரிதல் காண்க. 7

விளக்கம்

எய்தியது - இன்சாரியைப்பேறு

பிறிதுவிதி - நெடுமுதல் குறுகுதல் முதலியன.

நும் என்பதனை இயற்கைச் சொல்லாகக்கொண்டு நீஇர் என்பதனை அதன் திரிபு என்பர் தொல்காப்பியனார் (326) நீஇர் என்பதன் இகரத்தை எழுத்துப்பேறளபெடையாகக் கொண்டு பிற்காலத்தார் அதனை நீர் என்றே திரித்து வழங்குவாராயினர்.