பக்கம் எண் :

641

வகர ஈற்றுச் சுட்டுப்பெயர்க்குச் சிறப்புவிதி

155 வ-இறு சுட்டிற்கு அற்றுஉறல் வழியே.

இது வகர ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

இ-ள்:. வகரஈற்று மூவகைச் சுட்டுப்பெயர்க்கும் அற்றுச்சாரியை பெறுதல் நெறி என்றவாறு.

வரலாறு: அவற்றை - அவற்றொடு - இவற்றை - இவற்றொடு - உவற்றை - உவற்றொடு எனவரும். பிறவற்றொடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

‘வழி’ என்றதனால் குற்றொற்று இரட்டாமை கொள்க. 8

விளக்கம்

எய்தியது - இன்சாரியைப்பேறு

பிறிதுவிதி - அற்றுச்சாரியைப்பேறு

வ.இறுசுட்டு - அவ், இவ், உவ் என்ற மூன்றும்

இவை தனிக்குறில் முன்ஒற்று ஆதலின் பொதுவிதிப்படி அற்றுச்சாரியையொடு புணருமிடத்து இரட்டுதல் வேண்டும்; ஆனால் இந்நூற்பாவில் உள்ள ‘வழியே’ என்ற மிகையான் இரட்டா என்றார்.

அவைஇவை உவை என்ற அஃறிணைப்பன்மைப் பெயர்கள் வேறு, அவ் இவ் உவ் என்ற பன்மைப்பெயர்கள் வேறு என்பதனை,

‘அவை இவை உவை எனவரூஉம் பெயரும்
அவைமுத லாகிய வகரப் பெயரும்’

என்பதனான் அறிக. (தொல். சொல். 169)