652 இற்றும் இன்னும் பெறுதலும் இன்னும் உகரமும் பெறுதலும், உகரம் பெறுதலும், வேயாது வேயாப்பு என்றால்போல்வன ஈறுகெடுதலும் இன்னோரன்ன பிறவும் ஈண்டே அமைத்துக்கொள்க. இன்னும் இதனானே, உண்டு என்னும் சொல் தொழில் ஒழிய உண்மை என்னும் பண்பு உணரநிற்கும் இடத்துப் பகர முதல்மொழி வந்தால் உள்பொருள் என குற்றுகரம் மெய்யொடும் கெட்டு மேல்நின்ற ணகரஒற்று ளகரஒற்றாய்த் திரிதலும், உண்டு பொருள் என இயல்பு ஆகலும், ஏனைய வல்லெழுத்தும் இயல்புகணமும் வந்தால் உண்டுகாணம்- சோறு-தகர்-ஞாண்-நூல்-மணி-யாழ்-வட்டு-அடை ஆடை எனக்கேடும் திரிபும் இன்றி இயல்பாய் முடிதலும் கொள்க. உள்பொருள் என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ எனின், அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும், இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியது போலும் என்க. இவ்வெழுத்தோத்தினுள் கூறிய இலக்கணங்கள் எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி, புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக் கருவியும் அகக்கருவியும் என நால்வகைத்து. ‘எண்பெயர்’ (இ. வி. 2.) முதலியன புறப்புறக்கருவி. பதவியல் புறக்கருவி. ‘மெய்உயிர் முதல்ஈறு ஆம்இரு பதங்களும்’ 53 என்றால்போல்வன அகப்புறக்கருவி. ‘எகர ஒகரம் பெயர்க்குஈறு ஆகா’ 97 என்றால்போல்வன அகக்கருவி, |