பக்கம் எண் :

657

இலக்கணவிளக்கச் சூறாவளி

எண்பெயர் முதலிய புறப்புறக்கருவி என்றார். எண்ணும் முறையும் பிறப்பும் உருவும் அளவும் செய்கைக்குக் கருவியாகாமையின் அவை பயனிலவாய் முடியும்; இவர் கூறிய முறை நோக்குவார்க்கு என அறிக.

பதவியல் புறக்கருவி என்றார்க்கு, எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் – பதமாம் பொருள்தரின்’ (இ.வி. 38) என்பது ஒழித்து ஏனைய எல்லாம் வெற்றெனத் தொடுத்தலாய் முடியுமாறு அறிக.

‘மெய்உயிர் முதலீறு ஆமிரு பதங்களும் (இ.வி. 53) என்றல் தொடக்கத்தனவற்றை அகக்கருவி என்னாது அகப் புறக்கருவி எனவும் ‘எகர ஒகரம் பெயர்க்குஈ றாகா’ (98) என்றாற்போலும் புறப்புறக்கருவியை அகக்கருவி எனவும் கூறினார். இச்செய்கை செய்ததற்கு இது சிறந்தகருவி இது சிறவாக்கருவி என்னும் உண்மை அறிய வாட்டாமையின்.

இனிச்செய்கையை நான்காக வகுத்துக்கூறியதூஉம் பொருந்தாமை ஓர்ந்து உணர்க.

அமைதி: நன்னூல் விருத்தியுரையிலோ தொல்காப்பியப்பாயிர விருத்தி சூத்திரவிருத்திகளிலோ, கருவிசெய்கை என்பனவற்றை விளக்கிக்கூற வாய்ப்பு இருந்தும், அவற்றின் வகைகளை விளக்கிக் கூறுவதற்கு உள்ளங்கொள்ளாத முனிவர், நச்சினார்க்கினியர் உரையாசிரியர் முதலிய சான்றோரைப் பின்பற்றி இவர் உரைத்தனவற்றை உரியகாரணங்காட்டி மறுத்தல் இயலாது உளம்சென்ற வழியே சில உரைத்த மறுப்பு என என்று வரைந்தமை வியப்பிற்கு உரியது. ஒருவர் கூறியதை மறுக்கும்முன், இதுவே உண்மைச் செய்திஎன அதனைத்தெளிவாக முன்நிறீஇப் பின்னரே பிறன்கோள் மறுத்துத் தன்கோள் நிறுவுதல் வேண்டும். அந்நிலை ஈண்டு இன்மை அறிக.