பக்கம் எண் :

இலக்கண விளக்கம்
முதலாவது எழுத்ததிகாரம்
முதலாவது எழுத்தியல்

தற்சிறப்புப்பாயிரம்

‘மலைமகள் ஒருபால் மணந்துஉலகு அளித்த
தலைவனை வணங்கிச் சாற்றுவன் எழுத்தே’

என்பது சூத்திரம். இவ்வதிகாரம் எழுத்து உணர்த்தினமையின் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. எழுத்து என்றது அதன் இலக்கணத்தை. அதிகாரம் என்றது முறைமை. இவ்வதிகாரத்துள் ஐவகை ஓத்தினான் எழுத்து இலக்கணம் உணர்த்துகின்றார். அவற்றுள் இம்முதல் ஓத்துமொழி ஆக்கமும் அம்மொழிகள் தம்மொடும் உருபொடும் புணர்வுழித் தோன்றும் செய்கையும்போல் அன்றி, தனித்தும் மொழிப்படுத்தும் எழுத்தின்கண் கிடப்பனவாகக் கூறும் எண் பெயர் முதலிய பத்து இலக்கணமும் உணர்த்திற்று ஆகலின் எழுத்தியல் என்னும் பெயர்த்து. இதனுள் இத்தலைச் சூத்திரம், கூறத் தொடங்கிய பொருள் இனிது முடியும் பொருட்டு வணக்கமும், அதனான் முடிபு எய்தும் பொருளும் உணர்த்துவது ஆகிய சிறப்புப்பாயிரம் கூறுகின்றது.

இதன் பொருள்: மலை அரசன் மகளாகிய உமாதேவியைத் தனது ஒரு கூற்றின்கண்ணே கலந்து உலகத்தைப் படைத்த இறைவனைத் தொழுது யான் கூறுவன் எழுத்திலக்கணத்தை என்றவாறு.