பக்கம் எண் :

74

இஃது ஈண்டு இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி என்றார்க்கு, மறுதலையாகப் பொருளதிகாரத்தில் ‘உமை உருஉரு மடுத்து’ என்பது இந்நூல் நின்று நிலவாது இறுதல்வேண்டி எனப் பொருள்தருதலின் என்றார்.

ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு பொருள் விரித்து உரைக்க என்று ஆசிரியர் கூறினாராக, இவரை ஏலாது பொருள் கொள்ளச் சொல்லியவர் யாரோ? இங்ஙனம் கொள்ளுவார் மனத்திரிபு போக்கற்கு அன்றோ ‘ஏற்குமாறு’ என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

மூன்றாவது: உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உலகு பொருட்கு உரிய வேந்தன் என்றல் அவன் இறைமைக்கு ஏலாதவாறுபோல, ஐந்தொழிற்கும் உரிய தலைவனை உலகு அளித்த தலைவன் என்பது தலை அன்மையின் உலகு அளித்த தலைவன் என்றது குற்றம் என்றார்.

சொல்லதிகாரத்தில் ‘உலகு புரந்தருளும்’ எனவும் பொருளதிகாரத்தில் ‘உலகு இளைப்பு ஒழிக்கும்’ எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலும் கூறிய புகுந்தார் ஆதலின் ஈண்டுப்பட்ட குற்றம் என்னோ? சான்றோர் ஆங்காங்குக் கூறிய கடவுள் வணக்கத்தில் கடவுள் தலைமை அனைத்தும் ஒருங்கு சொல்லாது இரண்டொரு குணம் மாத்திரையே விதந்து தலைமை கூறல் ஆகிய பெருவழக்கை ஒட்டியே, ஆசிரியர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது இலக்கண இலக்கியங்கள் கற்றார் அனைவரும் உணர்ந்துள்ள செய்தியன்றோ!

நான்காவது : வணங்குதல் சிறப்புவினை ஆவது அல்லது பொதுவினை ஆகாமையின் வணங்கி என்பது குற்றம் என்றார்.