76 எழுத்திலக்கண வகை ‘எண்பெயர் முறைபிறப்பு உருஅளவு முதல்ஈறு இடைநிலை போலியொடு பதம்புணர்ப்பு உளப்பட ஆறிரு பகுதித்து அதுஎன மொழிப’. இது மேற்கூறுவல் என்ற எழுத்து இலக்கணம் இனைவகையான் உணர்த்தப்படும் என்று அதுபடும் பாகுபாடு தொகுத்த மொழியான் வகுத்துக் கூறுகின்றது. இ-ள். எழுத்து இனைய என்கின்ற எண்ணும், இன்ன பெயரின என்கின்ற பெயரும், இன்ன முறையின என்கின்ற முறையும், இன்ன பிறப்பின என்கின்ற பிறப்பும், இன்ன வடிவின என்கின்ற வடிவும், இன்ன அளவின என்கின்ற அளவும், மொழிக்கு முதல் நிற்பன இவை என்கின்ற முதல் நிலையும், இறுதி நிற்பன இவை என்கின்ற இறுதி நிலையும், இறுதி நிற்பன இவை என்கின்ற மயக்கமும், சில எழுத்துக்கள் கூடிச் சில எழுத்துக்கள் போல இசைக்கும், அது கொள்ளற்க என விலக்கும் எழுத்துப் போலியும்- ஆகிய பத்தனொடு, அவ்வெழுத்தான் ஆகிய மொழியும், அம்மொழி தம்மொடும் உருபொடும் புணரும் புணர்ச்சியும் ஆகிய இரண்டும் கூடப் பன்னிரு வகையினை உடைத்தாம் மேற் கூறுவல் என்ற எழுத்து இலக்கணம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. உரு என்றது ஈண்டு வரி வடிவை.-அதுமனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தல் பொருட்டு, வட்டம் சதுரம் முதலிய வடிவிற்றாக வேறு வேறு எழுதப்பட்டுக் கட்புலனாயே நிற்பது. கட்புலனாகாது கருத்துப் பொருளாயே நிற்கும் ஏனைய வடிவும் தன்மையும் முதல்நூல் ஆசிரியனே உணரும் ஆகலின், ஏனையோரால் உணர்தல் அரிது. அவ்வடிவு |