77 ஆராயுங் காலத்துக் குழல் அகத்தில் கூறின் குழல் வடிவும், குடத்து அகத்தில் கூறின் குட வடிவும், வெள்ளிடையில் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்கம் போலவும் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம் என்று உணர்க. எழுத்துக்களது குறைவும், கூட்டமும், பிரிவும், இனமும், ஒன்று பல ஆதலும், திரிந்ததன் திரிபு அது என்றலும், பிறிதுஎன்றலும், அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற்று என்றலும், நிலையாது என்றலும், நிலையிற்றும் நிலையாதும் என்றலும் ஆகிய இன்னோரன்ன பல வகையான் உணர்த்துவாரும் உளர். அவற்றுள் திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற்றும் நிலையாதும் என்றலும் ஆகிய இந்நயம்பற்றி இவர் இலக்கணம் கூறாமையின் இவை ஒழித்து ஏனைய எல்லாம் இப்பன்னிரு பகுதியுள் அடங்கும். அவை அடங்கும் இடத்து, எழுத்துக்களது குறைவும் கூட்டமும் பிரிவும் சார்பின் தோற்றத்தும், இனம் பெயருள்ளும் முறையுள்ளும், ஒழிந்தன எல்லாம் புணர்ச்சிக்கண்ணும் அடங்கும். அஃது ஆங்காங்கு உணர்க. விளக்கம்:- ‘சாற்றுவன் எழுத்தே’ என்பது பிண்டச் சூத்திரம் இஃது அவ்வெழுத்துப் பன்னிரண்டு வகையான் விளக்கப்படும் என்றலின் தொகைச் சூத்திரம் ஆயிற்று. எழுத்துப் போலி பற்றி இவ்வாசிரியர் சுட்டிச்செல்லும் செய்தி நச்சினார்க்கினியர் உரையை உட்கொண்டு எழுதப்பட்டது. எழுத்துப் போலியும் தொடை முதலியவை நோக்கிச் செய்யுளுக்கு இன்றியமையாதது ஆதலின், அதுவும் விலக்கற்பாற்று அன்று என்பதே இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் முதலிய நூற் கருத்தாகும். |