78 மொழி தம்மொடு புணர்தலாவது பெயர்வினை இடைஉரி என்ற நால்வகைச் சொற்களும் நிலைமொழிகளாகவும் வருமொழிகளாகவும் வந்து இயல்பாகவும் திரிந்தும் தம்முள் கூடுதல். நச்சினார்க்கினியர் பாயிர உரையில் வடிவு என்பதற்குத் தந்துள்ள விளக்கத்தையே இவ்வாசிரியர் உரு என்பதற்கு ஈண்டுக் குறிப்பிட்டுள்ளார். எழுத்து ஒலி வடிவினதாக மாத்திரம் இருப்பின், ஒரு முறைகேட்ட அளவிலேயே உள்ளத்து அமைக்கும் நல்லறிவு உடையோர்க்கே பயன்படல் கூடும். அதனைக் கேட்பாரேயன்றிப் பிறரும் பிற்காலத்தாரும் பயன்படுத்தல் இயலாது. ஆதலின் எல்லோருக்கும் பயன்படுமாற்றான் வரி வடிவு தோன்றிற்று. ஒலி வடிவின் நுட்பத்தை முதல்நூல் ஆசிரியனே முற்ற உணர்தல் கூடும். ஒலிக்குத் தனியே வடிவம் இல்லை அதுசார்ந்த பொருளின் வடிவே தன்வடிவாகக் கொள்வது. நீர் அலை கடலின் எல்லாத்திசைக்கண்ணும் காணப்படுமாறு போல, ஒலி அலையும் எல்லாத்திசையும் பரவிப்பயன்தரும். இனி, நச்சினார்க்கினியர் தொல்காப்பியப்பாயிர உரையுள் “எழுத்து என்றது யாதனை எனின் கட்புலன் ஆகா உருவும் கட்புலன் ஆகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம்: ஈண்டு உரு என்றது மன உணர்வாய் நிற்கும் கருத்துப் பொருளை; அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடை எறியப்படுதலானும், இன்பத்துன்பத்தை ஆக்கலானும். உருவும் உருவும் கூடிப்பிறத்தலானும் உந்தி முதலாகத்தோன்றி எண் வகை நிலத்தும் பிறந்து கட்புலனாம் தன்மை இன்றிச் செவிக்கண் சென்று உறும். |