பக்கம் எண் :

80

“இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறார் ஆயினார். அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவு எனப் பிறர்க்கு உணர்த்துதல் அரிது என்பது கருதி; அவ்வடிவு ஆராயுமிடத்துப் பெற்ற வடிவே தமக்கு வடிவாம்; குழல் அகத்தில் கூறின் குழல் வடிவும், குடத்து அகத்துக் கூறின் குட வடிவும், வெள்ளிடையில் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்கம் போல” எனவும் கூறிய செய்திகளை இயைபு பற்றிக் கொள்க.

எழுத்துக்களது குறைவும்................இன்னோரன்ன பல வகையான் உணர்த்துவாரும் உளர் - என்ற பகுதி தொல்காப்பிய முதல் நூற்பா உரையுள் உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிட்டுள்ள செய்தியேயாகும். எழுத்துக்களது என்ற சொல்லைச் குறைவும் கூட்டமும் முதலியவற்றோடு தனித்தனியே கூட்டிக் கொள்க. என்னை? அது என்பது ஆறாம் வேற்றுமையின் ஒருமைஉருபு ஆதலின் அது பன்மைச் சொற்கொண்டு முடிதல் ஏற்புடைத்து அன்மையின்.

எழுத்துக்களது குறைவு-குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் மகரக் குறுக்கம் என்பன.

கூட்டம் : உயிர்மெய், உயிரளபெடை ஒற்றளபெடை என்பன.

பிரிவு : உயிர்மெய் எழுத்தை மெய்யும், உயிரு மாகப் பிரித்துக் கொள்ளும் திறம்.

இனம் : குறிலுக்கு நெடில் இனம், வல்லினத்துக்கு மெல்லினம் இனம்.                    இடையினத்துக்கும் ஆய்தத்திற்கும் இனம் இல்லை. இனம் பற்றியே                    குறிலையடுத்து நெடிலும், வல்லினத்தையடுத்து மெல்லினமும் வைக்கப்பட்டன.