பக்கம் எண் :

90

சார்பெழுத்துக்கள்

5.குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தமொடு உயிர்மெய் ஈரளவு ஐஒள
மஃகான் குறுக்கம் உள்ளுறுத்து ஒன்பதும்
சார்பின் பால என்மனார் அவற்றுள்
உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு உயிர் அளவுஏழ்
ஒற்றளவு பதினொன்று ஒன்றுஒன்று ஏனைய
ஆயிரு நூற்றுஎண் ணைந்தும் அதன்விரியே.

இது மேல் தொகையான் ஒன்றாகக் கூறிய சார்பு எழுத்திற்கு வகையும் விரியும் கூறுகின்றது.

(இ-ள்.) குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஆய்தமும் ஆகிய மூன்றனொடு உயிர்மெய்யும் உயிர் அளபெடையும் ஒற்று அளபெடையும் ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் மகரக்குறுக்கமும் ஆகிய ஆறனையும் தலைப்பெய்தலான் அவ்வொன்பது எழுத்தும் சார்புஎழுத்தின் திறத்தன ஆயின என்றும், அவ்வொன்பதனுள் உயிர்மெய் இரு நூற்று ஒரு பத்தூறு என்றும், உயிர் அளபெடை ஏழ் என்றும், ஒற்று அளபெடை பதினொன்று என்றும், ஒழிந்த ஆறும் ஓரோ ஒன்று என்றும் அவ்வொன்பதன் பகுதி ஆகிய இருநூற்று நாற்பதும் அச்சார்பு எழுத்தின் விரியாம் என்றும் கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

இவை இங்ஙனம் ஆதல் தத்தம் விரிச்சூத்திரங்களுள் காண்க. எனவே, எழுத்து எனத் தொகையான் ஒன்றும் முதல் எழுத்து சார்பு எழுத்து என வகையான் இரண்டும், அவ்விரண்டன் பகுதியும் கூட்ட விரியான் தமிழ் எழுத்து இருநூற்று எழுபதும் ஆம் என உய்த்து உணர்க.

எழுத்து எனப்படுப

அகரம் முதல்
னகரம் இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றுஅலங் கடையே           தொல். 1