93 முற்றாய்தம் எட்டு உயிரளபெடை இருபத்தொன்று, ஒற்றளபெடை நாற்பத்திரண்டு, குற்றியலிகரம் முப்பத்தேழு, குற்றியலுகரம் முப்பத்தாறு என்பனவற்றை விளக்கிக்காட்டச் சிவஞான முனிவர் போல்வார் பொருந்தாக் கணக்கிட்டு இடர்ப்படுப. அவை பொருந்தாமை அவ்வவ்விரி நூற்பாவுள் காட்டப்படும். இவ்வாசிரியர் தனி எழுத்தை உட்கொண்டே உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு, உயிர் அளபெடை ஏழு, ஒற்று அளபெடை பதினொன்று, ஏனையவாகிய குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் ஆய்தம் மகரக்குறுக்கம் ஆகிய ஆறும் ஒவ்வொன்று - ஆகச் சார்பு எழுத்தின்விரி இருநூற்று நாற்பது என்பது மிகப் பொருத்தமானது. குற்றியலிகரம். குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றனையுமே சார்பெழுத்தாகக் கூறிய தொல்காப்பியனாரும், ‘குன்றுஇசை மொழிவயின் நின்றுஇசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே.’ 41 ‘ஐஒள என்னும் ஆயீர் எழுத்திற்கு இகர உகரம் இசைநிறைவு ஆகும்.’ 42 முதலிய நூற்பாக்களான் உயிர் அளபெடையும், ‘அளபுஇறந்து உயிர்த்தலும் ஒற்றுஇசை நீடலும் உளஎன மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்’. 33 ‘ஒற்றுஅளபு எடுப்பினும் அற்றுஎன மொழிப,’ (தொல் செய். 18) முதலிய நூற்பாக்களான் ஒற்றுஅளபெடையும், ‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.’ 56 |