பக்கம் எண் :

95

குற்றியலுகரம் தான்வரும் சொல்லின் ஈற்றயல் எழுத்தைக் கொண்டு நெடில் ஏழு, ஆய்தம் ஒன்று, உயிர் ஒளகாரம் நீங்கலான பதினொன்று, வல்லினம் ஆறு, மெல்லினம் ஆறு, இடையினம் வகரம் நீங்கலான ஐந்து என்று கணக்கிட்டுக் கொள்ளப்பட்டட தொகை முப்பத்தாறு. அம் முப்பத்தாறனொடு மியா என்ற அசைச் சொல்லையும் சேர்க்கக் குற்றிய லிகரத்தின் தொகை முப்பத்தேழு. மொழி முதல் இடை கடைகளில் வரும் ஐகாரக் குறுக்கம் மூன்று. ண ன மூன்னும் வஃகான் மிசையும் வரும் மகரக் குறுக்கத்தின் தொகை மூன்று. உயிர் ஏறிய வல்லெழுத்து ஆறற்கும் மிசைவரும் ஆய்தம், புணர்ச்சிக்கண் தோன்றும் ஆய்தமும் திரியும் ஆய்தமும். ஆக இரண்டனொடும்கூட ஆய்தத்தின்தொகை எட்டு-என்பது இடவேற்றுமையை உட்கொண்டே நன்னூலார் விரித்த தொகையாகும்.

மெய்ம்மயக்கத்துள் இடை எழுத்தாகிய ய ர ல வ ழ ள என்பனவற்றோடு பிறமெய்கள் மயங்கும் வேற்றுநிலை மெய் மயக்கம் கூறுமிடத்து, ‘யரழ முன்னர் மொழிமுதல் மெய் வரும்’ நன் 116 எனவும், ‘லளமுன் கசப வயஒன்றும்மே’ நன்.117 எனவும் ‘வம்முன் யவ்வே’ நன்.111 எனவும் கூறிய நூற்பாக்களால் வகரத்தின் முன் வல்லொற்று எதுவும் மயங்காது என்பதும், யரலழள என்பனவற்றின்முன் டற என்பன மயங்கா என்பதும் பெறப்படுதலின், டகர றகரம் ஊர்ந்த குற்றிய லுகரங் கொண்ட இடைத்தொடர்கள் வாரா என்பது உணர்த்தப்படுகிறது.

இலக்கண விளக்கச் சூறாவளி

ஆசிரியர் தொல்காப்பியனார் சார்பெழுத்து மூன்றே என்று வரையறுத்திருப்பவும், தாம் அவரினும் நுண்ணுணர்வு உடையார் போன்று நன்னூலார் கூறிய சொல் பற்றிச் சில முதல் எழுத்துக்களையும் அம்மூன்றனோடு கூட்டிச் சார்பு எழுத்து எனக்கொண்டார். அது பொருந்தாமை விரித்தியுள் விரித்துக் காட்டினாம் ஆண்டுக் காண்க.