பக்கம் எண் :

99

நிறுத்த முறையானே பெயர் கூறுவனவற்றுள் இஃது உயிர் பெறும் பெயர் வேற்றுமை கூறுகின்றது.

(இ-ள்.) அகரமாகிய முதலை உடைய பன்னீர் எழுத்தும் உயிர் என்றும், பன்னிரண்டனுள் அ இ உ எ ஒ என்கிற ஐந்தும் குறில் என்றும், ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்கின்ற ஏழும் நெடில் என்றும், குற்றெழுத்துள் அ இ உ என்கின்ற இம்மூன்றும் மொழிமுதற்கண் சுட்டுப்பொருள் உணர்த்திவரின் சுட்டு என்றும், எகரமும் யகரஆகாரமும் மொழிமுதற்கண்ணும், நெட்டெழுத்துள் ஆகார ஓகாரங்கள் ஈற்றின்கண்ணும், ஏகாரம் முதலினும் ஈற்றினும் வினாப் பொருள் உணர்த்திவரின் வினா என்றும் பெயர்பெற்று நடக்கும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

இது தொகை வகை விரிபடச் செய்கின்ற நூல் ஆகலானும், பொருள் ஒப்புமையானும் உயிர்மெய்யும் உடன் கூறினார்.

மொழி முதல் ஈறுகளில் வரின் எனப் பொதுப்படக் கூறிய அதனால், இவை தத்தம் குறிப்பின் பொருள் செய்த இடைச் சொற்களாய் ஒரு மொழியைச் சார்ந்தும் அதற்கு உறுப்பாயும் ஏற்ற பெற்றி வரும் எனக்கொள்க.

வரலாறு : அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன், அவன் இவன் உவன்; எப்பொருள் எவன் யா யாவன்; உண்கோ உண்கோ உண்கே ஏவன் என வரும். பிறவும் அன்ன.

மொழி முதற்கண் தனித்துவரின் சுட்டு என்றாரும் உளராலோ எனின், ‘சுட்டு வகரம்’ நன். 235 எனவும், ‘சுட்டின் முன் ஆய்தம்’ (நன்.251) எனவும் உறுப்பாய் வருவனவற்றையும் சுட்டு என்று அவர் தாமே ஆளுதலானும், ஆசிரியர் தொல்காப்பியனாரும்,