இது சொல்லின் கூறுபாடும் அதுபொருள் உணர்த்தும் இயல்பும் உணர்த்திய முகத்தான் மேல்கூறுவல் என்ற சொற்குப் பொது இலக்கணம் உணர்த்துகின்றது. இ-ள்: தனிமொழியும் தொடர்மொழியும் என இரு கூற்றதாய், இருதிணையும் அவற்றின் பகுதியாகின்ற ஐம்பாலும் ஆகிய பொருளையும் தன்னையும் மூன்றிடத்தினும் வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் சொல்மாத்திரத்தின் விளக்கி வேறு நிற்கும் வெளிப்படையானும் அவ்வாறு அன்றிச் சொல்லொடு கூடிய குறிப்பானும் விளக்குவது யான் முன்னர்ச் சொல்லுவல் என்ற சொல்லாவது என்றவாறு. எனவே, உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் ஆண்பாற்சொல் பெண்பாற்சொல் பலர்பாற்சொல் ஒன்றறிசொல் பலவறிசொல் தன்மைச்சொல் முன்னிலைச்சொல் படர்க்கைச்சொல் வழக்குச்சொல் செய்யுட்சொல் வெளிப்படைச்சொல் குறிப்புச்சொல் எனவும், உயிர்ப்பொருள் உயிர்இல்பொருள் இயங்கியல்பொருள் நிலையியல்பொருள் எனவும், காட்சிப்பொருள் கருத்துப்பொருள் முதற்பொருள் சினைப்பொருள் இயற்கைப்பொருள் செயற்கைப்பொருள் வழக்குப்பொருள் செய்யுட்பொருள் எனவும், பகத்து உரைக்கப்படும் சொல்லும் பொருளும் முறையே தனிமொழியும் தொடர்மொழியும் இருதிணையும் ஐம்பாலும் ஆகவும் அடங்குதலின், ‘தனிமொழி தொடர்மொழி’ எனவும், ‘இருதிணை ஐம்பால் பொருளையும் எனவும் கூறினார். இவற்றிற்கு உதாரணம் தத்தம் விரிச்சூத் திரங்களுள் பெறப்படும். சொல்தன்னை உணர்த்துமாறு ‘கடியென்கிளவி’ ‘புனிறு என்கிளவி’ எனவரும், பிறவும் அன்ன. ‘வயிர ஊசியும் மயன்செய் இரும்பும் செயிர்அறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும் தமக்குஅமை கருவியும் தாம்ஆம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே’ |