பன்மை சுட்டிய பெயர் என்றது பலபாலும் சுட்டி நிற்றலின் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் அடுத்து நின்றது என உரையாசிரியர் கூறியவாறே கூறாது இயைபின்மை நீக்கிய விசேடணம் அடுத்து ஆதீண்டு குற்றி என்றாற்போலத் தலைமை பற்றிய வழக்காய் நின்றது எனவும், பன்மை சுட்டுதற்குத் தலைமை ஆண்மைசுட்டிய பெயர்முதல் மூன்றானும் ஒருகால் சுட்டப்படும் ஒன்றும் ஒருவரும் போலாது இப்பெயரானே சுட்டப்படும் உரிமை உடைமையால் கொள்க எனவும் கூறினார். ஆண்மை சுட்டிய பெயர் முதல் மூன்றனையும் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் அடுத்து நின்ற பெயர் எனவும் கொண்டு அவற்றோடு உடன் எண்ணிய இதனை அவ்வாறு கொள்ளாது இயைபின்மை நீக்கிய விசேடணம் அடுத்து நின்றது எனக்கோடல் பொருந்தாமையானும், ஆண்மை சுட்டிய பெயர் முதலிய மூன்றும் போலாது பன்மை சுட்டிய பெயர்க்குப் பன்மை சுட்டுதற்கண் விசேடஉரிமை இன்மையானும், பெயரான் விசேடஉரிமை உண்டாயின் பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மை சுட்டாமையும் ஒருமை சுட்டுதலும் வழுவாம் ஆகலானும், இஃது அமைதிச் சூத்திரம் அன்மையானும் அது போலியுரை என்க. பலபாலையும் சுட்டி நிற்றலின் பன்மை சுட்டியபெயர் எனின், ஆண்மை சுட்டிய பெயர் முதலியனவும் பலபால்களையும் சுட்டி நிற்றலின் அவற்றையும் பன்மை சுட்டிய பெயர் எனல் வேண்டுமால் எனின், அது பொருந்தாது; நான்கு பாலும் சுட்டி நிற்கும் தன்னை நோக்கி ஏனை மூன்றுபாலும் இரண்டுபாலும் சுட்டி நிற்கும் பெயர்கள் சின்மை சுட்டி |