ஆண்மை சுட்டிய பெயர் முதலியவற்றால் உணர்த்தும் இயலாத அஃறிணைப் பன்மையைத் தான் ஒன்றுமே சுட்டி நிற்கும் சிறப்பினை உட்கொண்டு தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறியவாறே இதனைத்தன்னோடு இயைபின்மை நீக்கிய விசேடணம் அடுத்துநின்றது என்ற இவ்வாசிரியர் சுட்டியதன்கண் குறையின்மை அறிக. பன்மைப்பெயர் மற்றவை போலாது தன்பெயருக்கு ஏலாத ஒருமையையும் சுட்டுதலான், அது தன்னோடு இயைபின்மை நீக்கிய விடேசணம் அடுத்தது ஆதற்கண் இழுக்கு எதுவும் இன்று. அஃறிணைப் பன்மையைத் தான்மாத்திரமே சுட்டுதல் இதன் விசேட உரிமை ஆதலும் காண்க. வழுவன்று என்பதை விளக்கவே இதன் விசேடண இலக்கணத்தை விளக்கிக் கூறியதும் காண்க. பன்மை சுட்டிய பெயர் பற்றிய நூற்பாவில் அதன் பெயரது ஆராய்ச்சியை விளக்கிக் கூறவே, அத்தலைமை பற்றி யமைந்த பெயர் போதருதலும் காண்க. தொல்காப்பியத்தை ஒட்டிப்பேசும் முனிவர் அதன்கண் காணப்பெறாத பஃறொடைவெண்பா, பஃறாழிசைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், உயர்திணைக்கண் கள் ஈறு முதலியவற்றை மேற் கொண்டு விரித்துரைப்பது பொருத்தமில் கூற்றாதலும் காண்க. |