இது மேல் ‘தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும்’ என்றார், அவை இவை என்பதூஉம், ஏனைப்பெயர்கள் இவ்விடத்தன ஆம் என்பதூஉம் உணர்த்துகின்றது. இ-ள்: மேல் கூறிப் போந்த தன்மைப்பெயர் நான்கு ஆவன யான் என்பதூஉம் நான் என்பதூஉம் யாம் என்பதூஉம் நாம் என்பதூஉம் ஆம். முன்னிலைப்பெயர் ஐந்தாவன எல்லீரும் என்பதூஉம் நீவிர் என்பதூஉம் நீயிர் என்பதூஉம் நீர் என்பதூஉம் நீ என்பதூஉம் ஆம். இவை ஒழித்து ஒழிந்த பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்கு உரியனவாம். அவற்றுள் எல்லாம் என்பது மூன்றிடத்திற்கும் உரித்தாம் என்றவாறு. |