சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

108 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பகுப்பு ஏலாமை அறிக. ஒரோவழி அஃறிணைப்பெயர்கள் மொழியால் பேசுவன
உளவாயின், அது தெய்வத்தன்மை முதலிய விசேடத்தான் அன்றிப் பொருட்டன்மையால்
அன்மையின், அமைத்துக் கொள்வதன்றி அது பற்றி விரவுத்திணை என்றல் சிறிதும்
பொருந்தாது என்க. அற்று ஆதலின் அன்றே ஆசிரியர் தன்மையை உயர்திணை எனக்
கூறியதூஉம் என்க. இது கொள்ளாதார்க்கு,
 

  ‘சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபின் தொழில்படுத்து அடக்கியும்’
 
தொல்.பொருள். 196
என்பதனைத் தழுவுதலும்,
  ‘கேட்குந போலவும் கிளக்குந போலவும்.............
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே’
 
நன். 409
எனவழு அமைத்தலும் வேண்டா என்க.
 

அமைதி
 

  ‘தன்மை யான் நான்’ நன்.285 என்ற நூற்பா உரையில் நன்னூலார்
தொல்காப்பியனார் கூறியதற்கு மாறாக தன்மையை விரவுத்திணையாகக்
கொண்டதற்கு அமைதி காணும் நிலையில் “விலங்கினுள் ஒருசாரான கிளியும்
குரங்கும் யானையும் முதலாயினவும் மனனுணர்வு உடையனவாயின் அவையும்
ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் எனத் தொல்காப்பியனார் கருதுதலான்
அம்மரபுபற்றிப் பொதுப்பெயர் எனப்பட்டன என்க,” எனத் தாம் ஆறறிவு கற்பித்த
கிளி யானை முதலியன பற்றித் தன்மை விரவுப்பெயராகும் என்று கொள்ளும்
முனிவர் இவ்வாசிரியர் கூறும் கிளியும் குரங்கும் பற்றித் தன்மை
விரவுப்பெயர்ஆகாது என்று கொள்ளும் கருத்து சால வியப்பைத் தருவதாகும்.
நன்னூலார் கூறின் அது நுண்ணறிவுடைமையாகவும் இவ்வாசிரியர் கூறின் அஃது
அறியாமையாகவும் கொள்ளும் முனிவர்க்கு நடுவுநிலை யாண்டையது?