இது மேற்கூறிய பல்லோர்பெயரின் பகுதியாய் நின்ற ஒருவர் என்னும் பெயரின் இயல்பும் அதன் முடிபும் கூறுகின்றது. இ-ள்: மேல் கூறிப்போந்த எண் இயற்பெயருள் ஒருவர் என்று சொல்லப்படும் பெயர் உயர்சொல்லாய் உயர்திணைப்பாலுள் ஒருபால் உணர்த்தாது, ஒருவன் ஒருத்தி என்னும் இருபாற்கும் பொதுவாய்ப் பன்மைச்சொல்லொடு முறையும் உரிமை உடைத்து என்றவாறு. எனவே, தான் காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச்சொல்லொடு முடியாது, ரகர ஈற்றதாய் நின்ற சொல்தன்மைக்கு ஏற்ப, ஒருவர் வந்தார், ஒருவர் அவர் எனப் பன்மைச்சொல்லொடு முடியும் எனப் பால் பற்றிய மரபு வழு அமைத்தவாறு ஆயிற்று. உயர்திணை இருபாற்கும் பொதுவாய் நிற்றலின் ஈண்டுக் கூறினார். இனிப் ‘பாங்கிற்று’ என்ற மிகையானே, சாத்தனார் வந்தார்- முடவனார் வந்தார் முடத்தாமக் கண்ணியார் வந்தார்- தந்தையார் வந்தார் என்றாற் போலும் ஆர் ஈற்று விரவுப்பெயரும், கிளியார் வந்தார்- நரியார் வந்தார் என்றாற்போலும் அஃறிணை இருபாற்கும் உரிய ஆர் ஈற்றுச் சாதிப்பெயரும், நம்பியார் வந்தார்- நங்கையார் வந்தார்- இறையனார் வந்தார்- அகத்தியனார் வந்தார்- தொல்காப்பியனார் வந்தார் என்றாற்போலும் |