சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-34123

மனையை அளந்து பார்த்தும் பின்னர் அவற்றிற்கு அப்பெயர் கூறப்படுதலின் அவை
ஆகுபெயர் ஆதற்கு ஏற்புடைமையும், ஒன்று என்னும் எண்ணுப்பெயரான்
அவ்வெண்ணப்படும் பொருளைக் கூறுவதற்கு முன்னும் அப்பொருள் ஒன்றேயாய்
நிற்றலின் எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆதற்கு ஏற்புடைத்து ஆகாமையும் உடைமையின்.

இவ்வதிகாரம் எழுத்து- இவ்வதிகாரம் சொல்- இவ்வதிகாரம் பொருள்-
என்றாற்போல்வன எழுத்து சொல் பொருள் என்னும் சொற்களான் அவற்றிற்கு
இலக்கணம் கூறிய அதிகாரங்களைக் கூறின.

விளக்கு முரிந்தது- நெஞ்சு நொந்தது- நிருதி மேல் எழுந்தது- என்றாற்போல்வன
தானம் பற்றி நிகழும் சுடரும் உணர்வும் தெய்வமும் ஆகிய தானிகளின் பெயரால்
பிழம்பும் உறுப்பும் திசையும் ஆகிய தானங்களைக் கூறின.

இக்குடம் பொன்- இத்தூண் வெள்ளி- இவ்வாடை பஞ்சு எனவும், இஃது ஓர்
அம்பு இஃது ஒரு வேல்- எனவும், யாழ் கேட்டான்- குழல் கேட்டான்- எனவும் வரும்.
இத்திறத்தன எல்லாம் காரணப்பெயர்களான் முறையே அக் காரணங்களான் ஆகிய குடம்
முதலியவற்றையும் வடுவினையும் ஓசையினையும் கூறின.

இப்பொன் கடிசூத்திரம்- இப்பஞ்சுஆடை- இந்நெல் அவல்- இக்காணம்சோறு
என்றாற்போல்வன காரியப் பெயரான் அவ்வக்காரணங்களைக் கூறின.

இவ்வாடைகோலிகன்- இவ்வாடைசாலிகன்- என்றாற்போல்வன
வினைமுதல்பெயரான் அவரான் இயற்றப்பட்ட பொருளைக் கூறின.

அகத்தியம் தொல்காப்பியம் கபிலம் என்றாற்போல்வனவும் அன்ன. இவைஈறு
திரிதல் உரையில் கொள்க.