சுட்டு என்பது பிறிது பொருள் உணர்த்தாது அம்மக்களையே உணர்த்தி நிற்றலானும், பொற்றொடி என்பது பொன்னும் தொடியும் அன்றி அணிந்தாள் எனப் பிறிது பொருள் உணர்த்தி நிற்றலானும், இரு பெயர்ஒட்டு ஆகுபெயரும் வேறே, அன்மொழித்தொகையும் வேறே எனக்கொண்டு, ஈண்டு மக்கட்சுட்டு என்பதனை இருபெயர்ஒட்டு ஆகுபெயர்க்கு உதாரணம் ஆக்கி, ஆண்டுப் பொற்றொடி என்பதனை அன்மொழித்தொகைக்கு உதாரணம் ஆக்கின் படும் இழுக்கு என்னை எனின், மக்கட்சுட்டே இருபெயர்ஒட்டு ஆகுபெயராய் அச்சுட்டு மக்களை உணர்த்திற்றேல், மக்களாகிய மக்கள் என வருவது அல்லது ஒன்றைஒன்று விசேடித்து இன்னது இது’ என வாராமையின், மக்கட்சுட்டே இருபெயர்ஒட்டு ஆகாமையின் இருபெயர்ஒட்டு ஆகுபெயர் ஆமாறு யாண்டையது என்பதாம். கடுத்தின்றான்- புளித்தின்றான்- என்றாற்போல்வன விடாதுநின்று ஒருவாற்றான் இயைபு உடைய பிறிது ஒன்றனை உணர்த்தி நின்றன.
குழிப்பாடி நேரிது- இப்பட்டுச்சீனம்- என்றாற்போல்வன விட்டுநின்று ஒருவாற்றான் இயைபு உடைய பிறிது ஒன்றனை உணர்த்திநின்றன. பிறவும் அன்ன. |