கார்த்திகை- கார்த்திகைத் திங்களில் பூக்கும் காந்தளைக் குறித்தது. கூதிர்- அவ்விருதுவில் வீசும் காற்றைக் குறித்தது. இலை- இலையைஉடைய செடியையும், பூ அப்பூவினைப் பூக்கும் செடியினையும் ‘சினையிற்கூறும் முதலறிகிளவியாய்ச் சுட்டின. ஊண், எழுத்து, செய், பாட்டு என்ற தொழில்கள் தொழிலைக் கொண்ட பொருளை உணர்த்தின. ஏறு, குத்து என்பன எறிதற்றொழிலானும், குத்துதற் றொழிலானும் ஏற்பட்ட வடுவை உணர்த்தின. ‘ஆறு அறி அந்தணர் (கலி-1) என்புழி ஆறு என்பதனை நச்சினார்க்கினியர் வரையறைப் பண்புப்பெயர் என்று கூறியது போலவே, இவ்வாசிரியரும் தொடி துலாம் என்பனவற்றை வரையறைப் பண்புப்பெயர் என்றே கொண்டார் விளங்குதற் பொருட்டு வேறுவேறாக விதந்து கூறிய செய்தியையும் குறிப்பிட்டார். எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாது என்பதனைச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் விளக்கியவாறே இவ்வாசிரியரும் விளக்கினார். தொல்காப்பியனார் ‘எண்ணிறையளவு என மூன்றனையும் சேர்த்துச்சொல்லும் இயல்பினர். ஆகுபெயர் பற்றிப் பேசுமிடத்து, |