என எண்ணுப்பெயர் ஒன்று பத்து நூறு என்றாற்போல இயல்பாகவே எண்ணப்படும் பொருள்மேலும் நிற்குமாற்றையும் சுட்டினார் ஆதலின், எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாது என்பதே அவர்க்குக் கருத்தாதல் தெளியப்படும்.
விளக்கு ஒளிப்பிழம்பையும், நெஞ்சு மார்பினையும், நிருதி என்ற தெய்வப்பெயர் அதற்குரிய தென்மேற்குத்திசையையும் உணர்த்தியமை தானியாகுபெயர். ‘ஆகுபெயர் ஈறுதிரிதலும் உண்டு ஈண்டு’ நே.சொல்.23 என்றதனால், இயற்பெயர் ஈறுதிரிந்து ஆகுபெயர் ஆதலை நெமிநாதநூலாரும் உட்கொண்டார். தொல்காப்பியம், கபிலம் முதலியன ஆகுபெயராகும் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோருக்கு உடன்பாடாம்; சேனாவரையர், பிரயோக விவேக நூலார், சிவஞான முனிவர் முதலியோருக்கு உடன்பாடு அன்றாம். ‘இனித் தமிழ் இயல்பு நோக்காது சேனாவரையர் கூறிய சொற்பற்றிச் சிவஞானமுனிவர் அகத்தியர் தொல்காப்பியம் கபிலம் என்பன ஆகுபெயர் ஆகா எனவும், அன்விகுதி கெட்டுச் செயப்படுபொருள் உணர்த்தும் அம்விகுதியொடு உணர்ந்தன எனவும் உரைத்தார்; அஃது இலக்கணம் அன்று; என்னை? அம்விகுதி எச்சம்- தேட்டம்-நாட்டம்- முதலியவற்றுள் எஞ்சு-தேடு-நாடு முதலாய வினைமுதனிலையொடு கூடி வினைமுதற்பொருள் முதலாய அறுவகையுள் ஒரு பொருளை உணர்த்தல் அன்றிப் பெயர்முதல்நிலையொடு கூடி விகுதிப் பொருள் உணர்த்தல் யாண்டும் இன்மையானும் பெயர்முதல் நிலையொடு கூடின் பகுதிப்பொருளையே உணர்த்தல் குன்று சங்கு முதலாய பெயரொடு கூடிக் குன்றம் எனவும் சங்கம் எனவும் நின்றுழி விகுதிப்பொருள்களுள் ஒன்றும் உணர்த்தாமையான் அறியப்படும் என்பது நன்கு புலப்படும். |