சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

142 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  பெயரொடு இதற்கு வேற்றுமை உருபு ஏற்புழியும் தன் இருகிழமைப் பொருளினும்
திரிபு இன்றி நிற்றலாம் பெயர் வேற்றுமையும் ஏனை உருபுகளை ஏற்குமால் அது
ஒழித்தது என்னை எனின், அஃது ஏனை உருபுகளை ஏலாமை மேல் பெறப்படும்.
 

விளக்கம்
 

எய்தாதது- உருபு உருபு ஏற்றல்,
                    ஆறாம் வேற்றுமை உருபும் உருபுகளை ஏற்கும் என்ற கருத்து உரையாசிரியர்,
சேனாவரையர், நச்சினாக்கினியர் மயிலைநாதர், இலக்கணக் கொத்து நூலுடையார்
நேமிநாத நூலுடையார் முதலியோருக்கு உடன் பாடாகும். பேராசிரியரும் மரபியலில்
இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இனி, தெய்வச்சிலையார் ‘ஆறன் உருபு ஏனை உருபை
ஏற்கும் எனப் பொருள் உரைத்துச் சாத்தனதனை- சாத்தனதனொடு-என உதாரணம்
காட்டுபவால் எனின், அவ்வாறு வரும் அது என்பது உருபுநிலை ஒழிந்து பொருளாய்
நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்ற வழி இடைநின்ற அது என்பது
உருபாயின் சாத்தனைக் கொணர்ந்தான் என்று பொருள்படல் வேண்டும்; அவ்வாறு
பொருள்படாது உடைப்பொருளையே காட்டுதலானும், அஃறிணை ஒருமை அது என்னும்
பெயர்க்கு ஆதலானும் சாத்தன் பொத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற்போல்
வந்ததல்லது உருபு உருபேற்றல் என்றல் பொருந்தாமை அறிக’ என்றார்.
(தொல்.சொல்.150)
 

சூறாவளி
 

எழுவாயாய் நின்ற உருபே ஆறுவேற்றுமைகளின் உருபும் ஏற்கும் என்னும்
கருத்தான் ‘ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே’ எனக்கூறிய நன்னூலார் கருத்து
அறியாது, ஆறாம்வேற்றுமை உருபு பிற உருபுகளை ஏற்கும் எனக் கொண்டார். அது
பொருந்தாமை விருத்தியுள் கூறினாம்; ஆண்டுக்காண்க.