இது நிறுத்த முறையானே எழுவாய் வேற்றுமை உருபும் அதன் பயனிலையும் கூறுகின்றது. இ-ள்: மேல் கூறிப்போந்த வேற்றுமை எட்டனுள் முதல்வேற்றுமை ஆவது திரிபு இல்லாத பெயரேயாம். வினையையும் பெயரையும் வினாவையும் கோடல் அதற்குப் பயனிலையாம் என்றவாறு. திரிபு இல்லாமையாவது உருபும் விளியும் ஏலாது, ஆ அவன் என்றாற்போல நிற்றலாம்; ஆகவே எழுவாய் வேற்றுமை உருபாவது பெயர்ச்சொல் மூவகைப்பட்ட பயனிலையும் தன்கண் தோன்ற நிற்கும் என்பது ஆயிற்று. முடிக்கும் சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பொருள்நிலை ஆதலின் பயனிலை என்றார். ‘வினை’ எனவே, வினையும் வினைக் குறிப்பும் தழுவுதலான், |