நிறுத்தமுறை- ‘பெயரே ஐ ஆல்’ என்ற நூற்பாவில் நிறுத்தமுறை. திரிபு இல்லாத பெயர்-உருபும் விளியும் ஏலாது இயற்கையாக உள்ள நிலையில் இருக்கும் பெயர். ‘பெயர் தோன்று நிலையே’ என்பதற்குப் பெயர்ப் பொருள் அறுவகைப்பட்ட பயனிலையும் தன்கண் தோன்றி நிற்கும் நிலை என்று நச்சினார்க்கினியர் கூறியதனை உட்கொண்டு, இவ்வாசிரியர் தம் நூற்பாவிற்கு ஏற்ப எழுவாய் வேற்றுமை உருபாவது பெயர்ச்சொல் மூவகைப்பட்ட பயனிலையும் தன்கண் தோன்ற நிற்கும் நிலை என்றார். ஆ வந்தது என்புழி வந்தது என்ற முடிக்குஞ் சொல்லின் பொருளே ஆ வந்தது என்ற தொடர்மொழி அமைவதற்குப் பயன் ஆதலின், வந்தது என்பதனைப் பயனிலை என்றார். தொல்காப்பியனார் பொருண்மை சுட்டல், வியங்கோள் வருதல், வினைநிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல், பண்பு கொளவருதல், பெயர்கொள வருதல் என எழுவாய் வேற்றுமையின் முடிக்குஞ்சொல்லை அறுவகைப்படுத்தினார். அவற்றுள் பொருண்மை சுட்டல், வியங்கோள் வருதல் வினைநிலை உரைத்தல், பண்புகொள வருதல் என்ற நான்கும் வினையுள் அடங்குதலின் இவர் நன்னூலாரை ஒட்டி வினைப்பெயர், வினா என்ற மூன்றும் எழுவாய் வேற்றமைப் பயனிலையாகும் என்றார். பெயர்ப்பயனிலை மூன்று வகைப்படும் என்பதற்கு அகத்தியநூற்பா மேற்கோளாகும். பொருண்மை சுட்டல்- ஒருபொருளின் சாதித்தன்மையை உணர்த்தல். அஃது ஆஉண்டு என்றாற்போல்வது. ஆஉண்டு என்பதன்பொருள் ஆவின்தன்மை என்றும் |