சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-39147

நிலைபெற்றது என்பது. ஆவின் தன்மையாவது கொம்பும் அலைதாடியும் முதலாயின
உடையதாயிருத்தல். தனிப்பட்ட ஆ ஒன்று அழிதல் இயற்கை. ஆயின் ஆ என்ற
இனமே உலகில் இல்லாது அழிந்து விடினும், மக்கள் எண்ணத்தில் அஃது இருக்கும்வரை
அதன் தன்மை நிலைபெற்று விளங்கும் ஆதலின் ஆ என்பதனைப் பொய்ப்பொருள்
என்றும் ஆவின்தன்மையை மெய்ப்பொருள் என்றும் ஆ உண்டு என்பதனைப்
பொருண்மை சுட்டல் என்றும் முன்னோர் கொண்டனர்.

“பொருள் என்னாது பொருண்மை என்றார், அப் பொருளினது தன்மை
உணர்த்துதற்கு; பொருள் தன்மையாவது அப்பொருள்களின் சாதித்தன்மை; ஆ
என்னும்பொருள் கெட்டதேனும், அவ்வாவினது சாதித்தன்மை எக்காலத்தும் கெடாது
நிற்கும் என்பது உணர்த்துதற்கு ‘ஆ உண்டு’ என்றார். கட்புலனாகிய ஆ கெடவும்,
அச் சாதித்தன்மை கெடாது என்பது தோன்றப் ‘பொருண்மை சுட்டல்’ என்று சூத்திரம்
செய்தார்” என்பது நச்சினார்க்கினியர் உரை.                 தொல்.சொல். 67, நச்.

பண்பு கொளவருதல் எல்லாம் வினைக்குறிப்பாய் வருதலின், இல்லை அல்ல
முதலிய ஏனைய வகைப்பட்ட வினைக்குறிப்புக்களும் கொள்ளப்படும்.

எவன் என்பது இக்காலத்து என் எனவும், என்ன எனவும் மருவி வழங்கும்.
‘ஆ ஆயிரம்’ என்புழி, ஆ என்பது முடிக்கப்படும் சொல்; ஆயிரம் என்பது முடிக்கும்
சொல். முடிக்கும் சொல் முடிக்கப்படும் சொல் என்ற இரு நிலைமையையும் பெயர்
பெற்றிருத்தல் காண்க.

தமிழில் இயற்கையாகிய பெயர்ச்சொல்லே எழுவாய் வேற்றுமையாகும்.
வடமொழியில் இயற்கையாகிய பெயர்