எய்தாதது- எழுவாய் வேற்றுமை மறைந்து நின்றும் பயனிலை கொள்ளும் என்பது. பெயர் வெளிப்படையாக இருந்து பயனிலை கொள்ளுதலே சிறந்தது; வெளிப்படாது நின்று பயனிலை கோடலும் சிறந்தது அன்றாயினும் கொள்ளப்படும் என்பது. செல்வல் என்பது தன்மை ஒருமையையும், இது செய் என்பது முன்னிலை ஒருமையையும், எழுவாயின் உதவியின்றித் தாமே உணர்த்தும் ஆற்றலுடையன எனினும், பேச்சு வழக்கில் எழுவாயையும் இயைத்தே பேசுதல் உள்ளமையால், இவை போல்வனவற்றிற்குத் தேவையின்றேனும் எழுவாயை இயைத்துப் பேசுதலே சிறந்தது என்பதாம். எழுவாய் ஒன்றுமே மறைந்து வரலாம், பயனிலை மறைந்து வருதல் கூடாது என்பதும் இந்நூற்பாவின் போந்த பொருளாகக் கொள்ளப்பட்டவாறு. |