பொருள் கோடல் வேண்டும் என நன்மக்கள் கூட்டத்தார் தம்மிடை முடிவு செய்த பொருளைச் சொல் கோடலாம்.தொடர்மொழியாவது தனி மொழியின் ஈட்டம்; அஃது அவாய்நிலை தகுதி அண்மைநிலை என்ற மூன்றானும் அமையும் என்று வடநூலாகும், தொகைநிலை வகையானும் பயனிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் அமையும் என்று தமிழ் நூலாரும் கொண்டனர். இக்கருத்துக்களைச் சேனாவரையர்உரை, இறையனார்களவியலுரை, உரையாசிரியர் உரை, பேராசிரியர்தம் மரபியல் உரை, நச்சினார்க்கினியர் உரை இவற்றால் உணரலாம். அவாய்நிலையாவது தன்னொடு சேர்ந்து தொடர்ப்பொருளை முடித்தற்குரிய மற்றொரு சொல்லை அவாவி நிற்பதாம். ஆவை என்பது கொணா என்பதனை அவாவி நிற்றல் அவாய் நிலையாம். தகுதியாவது பொருள் விளங்குவதற்கேற்ற சொற்கள் சேர்ந்து நிற்றலாம். அது நீரால் என்ற சொல் நனை என்ற சொல்லைச்சேர்ந்து தன்பொருள் முற்றுப்பெறுமாறு அமைதல் போல்வதாம். நீரால் என்பதற்கு நனை என்ற சொல் சேர்தலே தகுதியன்றி எரி என்ற சொல் சேர்தல் தக்கது அன்மை காண்க. அண்மை நிலையாவது தொடராய் நிற்கும் சொற்களை இடையீடின்றிச் சொல்லுதல்; அஃது ஆற்றங்கரைக்கண் ஐந்துகனிகள் உளவாகின்றன என்பது போல்வது. |