நான்காம் எண்ணும் முறைமை- 194 ஆம் நூற்பாச் செய்தி. நேர்ச்சி- ஒன்றற்கு ஒன்றைத் தருவதாக ஒத்துக் கொள்ளுதல். தகவு- ஒன்றற்கு ஒன்று ஏற்புடைத்தாதல். அதுவாதல்- உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிதல். அவலுக்கு நெல்என்புழி, நெல் என்ற பொருள் உருபு ஏற்ற பொருளாகிய அவலாகவே தான் திரிந்து விடுதல். பொருட்டு - ஓர் ஊதியம் கருதி ஒரு தொழில் நிகழ்த்துதல். கூலிக்கு ஆடை வெளுக்கும் என்புழி, ஆடையை வெளுத்தல்தொழிலைக் கூலியாகிய ஊதியம் கருதி நிகழ்த்தல் காண்க. முறை- பிறப்புக் காரணமாக ஏற்படும் தொடர்பு. மாணாக்கனுக்கு அறிவு கொடுத்தான் என்புழி, ஏனைக் கொடைப்பொருள் கொடுப்பானை விட்டு நீங்கிக் கொள்வானிடமே செல்லவும், இக் கொடைப்பொருள் கொடுப்பானையும் விட்டு நீங்காது கொள்வானிடமும் சேர்தல் காண்க. |