இஃது ஏழாம்வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது. இ-ள்:ஏழாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு கண் என்பதாம்; அதனது பொருள் வினை செய்யாநிற்றலாகிய இடத்தின் கண்ணும் நிலமாகிய இடத்தின்கண்ணும் காலம் ஆகிய இடத்தின்கண்ணும் என அம் மூவகைக்குறிப்பின் கண்ணும் தோன்றலாம்; அன்றியும் கண் முதலாக இடம் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பது பொருளும் அவைபோல்வன பிறவும் ஏழாவதன் திறத்தன என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. எனவே, இடமாகக் குறிப்பிடாத வழி அப்பெயர்க்கண் வேற்றுமை தோன்றாது என்பதாம். தன்னினம் முடித்தல் என்பதனால், ஏனை வேற்றுமைச் சொற்களும் அவ்வப் பொருட்குறிப்பு இல்வழி அவ்வப் பெயர்க்கண் வாராமை கொள்க. வரலாறு: தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கண் இருந்தான், கூதிர்க்கண் வந்தான் என வரும். |